கிருஷ்ணப்பருந்து – ஆ.மாதவன் – புத்தக அறிமுகம்

Please follow and like us:

  • 2
  • Share

 

மனிதனின் குணங்களில் மிக முக்கியமானது காமம். எல்லா உயிர்களும் வாழவும், பெருகவும் அதுவே அடிப்படையாக இருக்கிறது. ஆனால் மனிதனின் பகுத்தறிவின்படி காமம் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய குணமாக மாற்றமடைந்திருக்கிறது. காமத்தைப் பற்றிய தேடல்கள்தான் கலையாக வளர்ந்து ஒவ்வொரு மனிதனையும் கவர்கிறது. காமம் இயல்பானது என்ற புரிதல் இருந்த காலத்தில் வாழ்வும் எளிமையாகவே கடந்துபோயிருக்கிறது.

சங்கப் பாடல்களில் ஒரு பெண்ணோ, ஆணோ காதலிப்பதோ உறவு கொள்வதோ குற்றமாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் பின் வரும் காலக்கட்டங்களில் வெளியிலிருந்து வந்த கலாச்சார பகிர்வுகள் மற்றும் திணிப்புகளால், காதல் என்பதோ காமம் என்பதோ முற்றிலும் ஒதுக்கப் படவேண்டியவை என்ற தோற்றம் தமிழ் சமூகத்தில் உருவாகி இருக்கிறது. நமது சமூகத்தில் எல்லோருமே வானத்தில் இருந்து குதித்த அல்லது பூமியில் இருந்து முளைத்தவர்கள் என்பது போன்று நடிப்புடனே வாழ்கிறோம். எல்லா மதங்களுமே கடவுளையும், காமத்தையும் எதிர் எதிர் துருவங்களாக வைத்து பிழைப்பை நடத்துகின்றன. உண்மையில் காமம் அவ்வளவு ஒதுக்கப் பட வேண்டிய விஷயமே அல்ல.

பேரிலக்கியங்கள் எல்லாமே மனிதனின் பாலுணர்வின் விளைவுகளைப் பேசுபவையே. இந்நிலையில், அவற்றில் சில, மதங்கள் பேசும் கருத்துகளை மறுபிரதி எடுத்து – நீதி சார்ந்த காம ஒழுக்கங்களை போதிப்பவை. மற்றவை மனிதனின் இயல்பாக காமத்தை எடுத்து சொல்பவை. தமிழ் தீவிரஇலக்கிய சூழலில் இந்த இருவகை படைப்புகளில் முதல்வகைப் படைப்புகள் அவ்வளவாகக் கவனம் பெற்றவை அல்ல.

இந்நிலையில் ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து நாவல் நம் முன் வைப்பது என்ன?

இது ஒரு மனிதனின் பார்வையில் விரியும் சற்றே நீண்ட சிறுகதை என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த கதை முழுக்க ஒரு மனிதனின் இயல்பைச் சார்ந்து நகர்கிறது. காலம் மட்டுமே நீண்டு கிடக்கும் இந்த கதையில்…. கதாப்பாத்திரங்கள் உட்பட கதையின் எந்த ஒரு உறுப்பும் பெருமாற்றங்களை அடைவதில்லை.

சுவாமி என்று அழைக்கப்படும் நாவலின் நாயகன், காமத்தைப் புறந்தள்ளி யோகநாயகனாக வாழ முயல்கிறான். அவன் மனைவி இறந்துவிட்டாள். அவன் தொடர்ந்து பக்தியின் மூலம் காமத்தைக் கடக்க முயல்கிறான். அவனிடம் வந்து சேரும் வேலப்பன் என்ற சிறுவனின் வாழ்வும், அவன் வாழ்வுடன் பிணைந்து விடுகிறது. இந்த இடத்தில் முக்கிய அம்சம், நாவலின் முழுப்பகுதியிலும் வேலப்பனின் குணாம்சம் மட்டுமே மாற்றம் அடைகிறது. நாவலின் இறுதி வரை வேறெந்தக் கதாப்பாத்திரமும் குணநல மாற்றங்களை அடைவதில்லை. இது இந்த நாவலின் பெரும் குறை.

நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கிருஷ்ணப்பருந்து ஒரு குறியீடாக, ஒரு சாட்சியாக வருகிறது. தெய்வாம்சம் கொண்ட சுவாமியின் அறையில் திறந்த மார்புகொண்ட பெண் ஒருத்தியின் ஓவியம் இருப்பதை வேலப்பன் திடீரெனப் பார்க்கிறான். ஏனென்றால் கடந்த காலத்தில் அவன் அவரை ஒரு முனிவனைப் போல கருதிவந்திருப்பதால் அதன் இருப்பை அதற்கு முன்னர் உணர்ந்ததில்லை. ஆனால் அவருள் எப்போதும் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துவரும் காமம் அந்த ஓவியம் வழியே வேலப்பனுக்கும் நமக்கும் உணர்த்தப்படுகிறது. நாம் புனித பிம்பங்களாக ஆராதித்துவரும் ஆளுமைகளின்மேல் வரும் சந்தேகங்கள் அவர்களையோ அல்லது அவர் மேல் கொண்ட சந்தேகங்களையோ முற்றிலும் நிராகரிக்க வைக்கும். வேலப்பன் சந்தேகத்தை நிராகரிக்காமல் சுவாமியை நிராகரிக்கத் தொடங்குகிறான்.

சுவாமி தன் மனைவியுடன் நடத்திய சிருங்காரங்களின் நினைவில் வாழ்கிறார். வெளியில் அந்த சிருங்காரங்கள் குறித்த நினைவுகள் வராமல் ஒரு யோகி போன்ற பிம்பத்துடன் வாழ்வதாக நடிக்கிறார். இறுதில் சுவாமி தன் தாடியை மழித்துவிட்டு வரும்போது அவரின் ஒழுக்க முகமூடியையும் சேர்த்தே மழித்துவிடுகிறார்.அவரின் உண்மையான பிம்பம் வெளிப்படுகிறது. நாவலின் இந்தப் பகுதியில் கிருஷ்ணப்பருந்து வருவதே இல்லை. ஏனென்றால் கிருஷ்ணப்பருந்து என்பது அவரின் உள்ளே இருக்கும் காமத்தின் குறியீடு. வேலப்பனைக் காப்பாற்றுமாறு கேட்கும் அவன் மனைவி மீது காமம் நுரைத்து வெடிக்கிறது. இந்நிலையில் வேலப்பன் இவர் மீது கொண்ட சந்தேகம் உண்மையாகிறது. அவன் மனைவி அவன்மேல் கொண்ட காதலும் உண்மையாகிறது. அவள் காமத்தின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் இதுவரை அவர் அவர்மேல் அவராக உருவாக்கிக் கொண்ட பிம்பம் உடைந்து சுக்கல்சுக்கலாக நொறுங்கிப் போகிறது. நொறுங்கிய பிம்பங்கள் அவரையே பார்த்து சிரிக்கும் வேளையில் அவர், காமத்தை நிராகரித்து வேலப்பனைக் காப்பாற்ற வெளியேறிப்போகிறார்.

நாவல் முழுவதும் ஒரு வித நாடகத் தன்மை இருந்தாலும், இறுதிக்காட்சி மிகை உணர்ச்சியுடன் கூடிய நாடகமாகத் தோன்றுகிறது. ஏனென்றால் ஒருவன் அல்லது ஒருத்தியிடம் உறவுக்கான சம்மதம் பெற்ற பின் அதைத் தவித்துவிட்டுப் போவதென்பதெல்லாம் இயல்பில் நடக்காது. இது போன்றதொரு சூழல் யாருக்காவது அமைந்தால், அவர்கள் உறவு கொண்டுவிட்டு வாழ்நாளெல்லாம் அதை நினைத்து வருந்துவார்கள் அல்லது மகிழ்வார்கள். இந்த இடத்தில் நாவலின் நீதி சொல்லும் போக்கு நாவலை விட்டுத் துருத்தியபடித் தெரிவது நாவலின் தோல்வி என்றே சொல்லலாம்.

மற்றபடி மனித மனதின் மாற்றங்கள் எப்படி மனித உறவுகளை நிர்ணயிக்கிறது என்பதைச் சொல்வதில் நாவல் வெற்றிபெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.

புத்தகத்தின் பெயர் : கிருஷ்ணப்பருந்து
எழுதியவர் : ஆ.மாதவன்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
67 பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை
சென்னை – 14
விலை : 65 ரூபாய்

Please follow and like us:

  • 2
  • Share

Leave a Reply

Close Menu