ஆயுதப்போர் வழியே தீர்வு – சாத்தியமா?

Please follow and like us:

  • 2
  • Share

நாற்பத்துநான்கு இந்திய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதில் இருந்தே வலதுசாரிகள் போர் வேண்டும் என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள். வலதுசாரி பா.ஜ.கவும் அதன் கோட்பாட்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-உம் இம்மாதிரியான வழிமுறைகளை நம்புவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. உலகம் மாறிவருவதை, புதிய கோட்பாடுகள் பிறப்பதை, அமைப்புகள் உருவாவதை எந்தவொரு வலதுசாரி அமைப்பும் விரும்பாது. உள்ளூர் அளவில் பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் தொடங்கி உலக அளவில் பெண்ணியம், பாலின சமத்துவம், பொதுவுடைமைவரை எதையும் வலதுசாரிகள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

கடந்த நூறு ஆண்டுகளாக இந்துத்துவ அரசியல் அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றின் கோட்பாட்டு உருவாக்கம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவான நூல்களில் இருந்து தோன்றியது. அந்நூல்கள் உருவான காலக்கட்டத்தில் அரசும் அதிகாரமிக்க மத அமைப்புகளும் மக்களை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை. அவை தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கில் மக்களைச் ஜாதி அடிப்படையில் பிரித்தன. முழுவதும் அழுகிப்போன பார்ப்பனியக் கருத்தியல் பார்வைகளை முன்வைப்பவை அவை. அதன்பிறகு இந்திய மண்ணில் இஸ்லாமிய, மேற்கத்திய, பொதுவுடைமை மற்றும் தனிமனித உரிமை சார்ந்த பல சிந்தனைகளின் தாக்கம் வலுவாக ஏற்பட்டது. இது எதுவும் மேற்கண்ட வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் சிந்தனையில் மாற்றங்களை உருவாக்கவில்லை. எத்தகைய சிந்தனையானாலும் அவற்றை ஆதாரம் ஏதுமின்றி மறுத்து, கீழ்மைப்படுத்துவதை மட்டுமே இந்துத்துவவாதிகள் செய்துவந்தனர்/வருகின்றனர்.

அவர்கள் அரசியல், போர், நிர்வாகம் ஆகியனவற்றில் ஏற்பட்டுள்ள உலகளாவிய சிந்தனைகளையும் மாற்றங்களையும் கற்றுக்கொள்ளவோ, செயல்படுத்தவோ தயாராய் இல்லை. அப்படியான ஒரு கற்கால அமைப்பு ஆட்சி செய்தால் எப்படி இருக்கும் என்பதன் எடுத்துக்காட்டு – கடந்த ஐந்து ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி.

அரசர் மோடி – இந்துத்துவா கூட்டு

அவர்களின் வேதம் கூறுவதுபோல் அரசருக்கு மிஞ்சிய சட்டம் இல்லை, மதத்திற்கு மிஞ்சிய அதிகாரமில்லை என்ற காலாவதிச் சிந்தனையின் வெளிப்பாடுதான் – இன்றைய மோடியும், அவரது இந்துத்துவ பரிவாரங்களும். உலகம் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு பல பரிசோதனைகளைச் செய்துபார்க்கிறது. இந்துத்துவவாதிகளோ ஜனநாயகத்தை மறுத்து கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் வேலையை முன்னெடுக்கிறார்கள். அதற்கு ஒரே காரணம்தான் உண்டு – ஜனநாயகம் கேள்வி கேட்கும் உரிமையை மக்களுக்கு வழக்கியிருக்கிறது. அது இந்துத்துவ வலதுசாரிகளுக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் யாருக்கும் பதில் கூறியவர்கள் அல்ல. ஆகவேதான் இந்த ஆட்சி தொடங்கியதும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பெயரளவில் நீடித்திருக்கும் ஊடகம் அடக்கி ஒடுக்கப்பட்டு, ஆளுவோரின் புகழ்பாடும் அமைப்பாக மாற்றப்பட்டது. இன்று பெரும்பான்மை இந்திய ஊடகங்கள் துதிபாடுவதைத் தவிர வேறெந்தக் காரியத்தையும் செய்வதில்லை என்று உறுதிபூண்டுள்ளன. அதன் காரணமாக மக்கள் ஊடகங்களைக் கோமாளிகளாகக் கருதும்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மக்கள் பேஸ்புக், ட்விட்டர் போன்ற ஊடகங்களை நம்பத்தொடங்குவது, மற்ற மரபுசார் ஊடகங்களின் தோல்வியால்தான். இதைச் செய்துமுடித்த அரசு அடுத்தகட்டமாக, வங்கிகள், ரிசர்வ் வங்கி, அமைச்சகங்கள், கல்வி நிறுவனங்கள் & அமைப்புகள், விவசாயம், பொது விநியோகம், பொதுத்துறை நிறுவனங்கள், வரி வாங்கும் அமைப்புகள், தொழில்துறை, சி.பி.ஐ, நீதி அமைப்புகள் என்று ஒவ்வொன்றாகச் சிதைத்துவந்தது. இறுதியாக அவர்களிடம் சிக்கிச் சிதைத்திருப்பது – ராணுவம்.

இதுதொடர்பாக மோடியிடம் எந்தக் கேள்வியும் யாரும் எங்கும் கேட்கமுடியாது. ஏனென்றால் அவர் அரசர். அவரை விமர்சிப்பவர் தேசதுரோகி. அப்படிப்பட்டவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூச்சல்போடுகிறது அவரது சேனை. ஆனால் ஜனநாயகம் என்பது உலகப்பொருளாதாரத்துடன், நிலம் சார் அரசியலுடன் இணைந்து பயணிப்பது. அது இப்படிப்பட்ட கற்கால நடைமுறைகளை நீண்டநாட்களுக்கு அனுமதிப்பதில்லை. பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல், இம்ரான் கானின் நடவடிக்கைகள், உலக அரங்கில் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் தோல்வி ஆகியவையெல்லாம் அதன் பன்முக வெளிப்பாடுகள்தான்.

இந்திய அரசியல் கட்சிகளின் கட்டமைப்பு

இன்றைய இந்திய அரசியல் சூழலைப்பற்றிப் பேசுவதற்கு முன்பு, நமது நாட்டின் அரசியல் கட்சிகளின் பொதுக்கட்டமைப்பு எப்படி உள்ளது என்று பார்க்கவேண்டியது அவசியம்.

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் முழுமையான அரசியல் பலத்துடன் இருந்தது. இதற்கு நேர்மாறாக இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களிடையே நல்ல செல்வாக்கினைப் பெற்றிருந்தன. அதேசமயம் அதிகாரமோ, மக்கள் செல்வாக்கோ ஏதுமற்ற ஆர்.எஸ்.எஸ் முழுமையான வலதுசாரி அமைப்பாக நிலைகொண்டிருந்தது. அதுதான் பின்னர் உருவாகி வளர்ந்த பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பு.

இதை நாம் ஒரு ஸ்பெக்ட்ரமாகப் பார்க்கலாம். ஒரு முனையில் ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரி கோட்பாட்டு அமைப்புகள் இருக்க, மறுமுனையில் தீவிர இடதுசாரிக்கோட்பாட்டு அமைப்புகள் செயல்பட்டுவந்தன. இவை தங்களை வெகுஜனப்படுத்திக்கொள்ள முயன்றபோது ஒருமுனையில் பாஜகவும், மறுமுனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் உருவாயின. இவை இரண்டிற்கும் இடையேயான சமரசப்புள்ளியாக காங்கிரஸ் நீடித்தது. ஏனெனில் அக்கட்சியில் வலது, இடது என்று இருவகைச் சிந்தனாவாதிகளும் இடம்பெற்றிருந்தனர். ஜனநாயகத்தில் சமரசப்புள்ளியை ஒட்டிய அமைப்புகள் எப்போதும் அதிகாரத்தில் நீடித்திருக்கும். அதற்குக் காங்கிரசும் விதிவிலக்கல்ல.

இடதுசாரிகளுக்கும், காங்கிரசிற்கும் இடையில் நீடித்த முரண்களுக்கான சமரசப்புள்ளிகளாக திராவிட இயக்கங்களையும் (திக, திமுக), விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகளையும் சொல்லலாம். அவை கருத்தியல் ரீதியாக ஒருபோதும் வலது முனைக்குச் செல்லாதவை. ஆனால் எந்தவொரு நெகிழ்வுமற்ற இடதுசாரிகளிடம் இருந்து மாறுபட்டவை. அதிகாரத்திற்காகச் சில சமரசங்களில் ஈடுபடுபவை. இன்றும்கூட நடைமுறைவாதம் வழியேதான் திராவிடக்கட்சிகள் தங்கள் அரசை இயக்கிச்செல்கின்றன. அதனாலேயே அறிவுத்தளத்தில் இவ்வியக்கங்கள் நீண்டகாலமாக இடதுசாரிகளால் புறக்கணிக்கப்பட்டுவருகின்றன. இடதுசாரிகள் திராவிட இயக்கங்கள்மீது வைக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளையும், தீவிர இடதுசாரிக் கோட்பாட்டு அமைப்புகள், இடதுசாரிகள்மீது வைத்துவருகின்றன என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

இன்னொருபுறம், ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்பாடுகளை அப்படியே நிகழ்த்தும் நிறுவனமாக பாஜக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தவிர்த்த ஏனைய சில்லறை இந்துத்துவ இயக்கங்கள் எழுப்பும் கூச்சல்கள் தவிர்த்து அவர்களுக்குள் பெரிய முரண்பாடுகள் கிடையாது. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையில் கோட்பாட்டு ரீதியான சமரசப்புள்ளியாக சிவசேனா போன்ற அமைப்புகள் உள்ளன.

சமநிலைக்குலைவு

கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள உலகமயம் சார்ந்த பொருளாதார மாற்றங்கள் காரணமாக இடதுசாரிகள் மக்களிடம் தாங்கள் பெற்றிருந்த செல்வாக்கினைப் பெருமளவு இழந்துவிட்டனர். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற பேராசான் ஹெராக்கிளிடஸின் வாக்கை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறியதே இதற்குக் காரணம். வெகுஜன அரசியலில் இருந்து இடதுசாரிகள் ஓரங்கட்டப்பட்டதும் இந்திய அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. சீசா பலகை வலதுசாரிகள் பக்கம் சாயத்தொடங்கியது. சீசாவின் மத்தியில் சமரசப்புள்ளியாக இருந்த காங்கிரஸ் வேறுவழியின்றித் தனது இந்துத்துவ முகத்தைக் காட்டித் தனது இருப்பை நிலைநிறுத்த முயன்றுவருகிறது. இன்று ராகுல்காந்தி கோவில் கோவிலாகச் சென்று ‘நான் இந்துப் பார்ப்பனன்‘ என்று கூறுவது இதன் காரணமாகத்தான். இதை நேருவோ, இந்திராகாந்தியோ ஒருபோதும் செய்திருக்கமாட்டார்கள்.

காங்கிரஸ் இப்படியான நிலைக்கு நகர்ந்தபோதிலும், அந்த இயக்கத்தில் அரசியல் சிந்தனாவாதிகளுக்குக் குறைவேயில்லை. மிக முக்கியமாக மாற்றுக்கருத்துகொண்டோர் அவர்களோடு உரையாடவும் முடியும்.

தேர்தல் வழியே மக்கள் நம்மைத் தேர்ந்தெடுப்பது இந்த அமைப்புகளை சீர்திருத்தி நீடிக்கச்செய்யவே ஒழிய அமைப்புகளைக் கேலிக்கூத்தாக்கி அழித்தொழிப்பதற்கு அல்ல. அமைப்புகள் நீடித்திருக்காவிட்டால் நாம் அதிகாரத்தை அடைய முடியாது. அரசு அமைப்புகளின் சிதைவு நாட்டைச் சிரழிக்கும். ஜனநாயகம் என்பது சமரசங்களுக்கான இடம். அங்கு அதிகாரத்தைக்கொண்டு சாதிப்பதைவிட, பேச்சுவார்த்தையால் பல விஷயங்களைச் சாதிக்க முடியும். இவை யாவற்றையும்விட இந்தியா என்பது உலகின் பொருளாதாரத்தைச் சார்ந்து இயங்கும் ஒரு வளரும் நாடு. தன்னிச்சையான நடவடிக்கைகள், அதிகாரக்குவிப்பு, தனிநபர் வழிபாடு ஆகியன நாட்டைப் பொருளாதார ரீதியாகச் சிதைத்துவிடக்கூடியவை என்றெல்லாம் காங்கிரஸ் மேலிடம் உணர்ந்துள்ளது. அவர்கள் தங்கள் கடந்தகாலத் தவறுகளில் இருந்தே இவற்றைக் கற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் பாஜக இப்படியான எந்தவொரு சிந்தனையையும்கொண்ட கட்சியல்ல. ஆகையினால்தான் அவர்களால் எளிதாகப் போர் அறைகூவல் விடுக்க முடிகிறது. ஜனநாயகம் குறித்த புரிதலற்ற சிலர் அதை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.

எந்த ஒரு குடிமகனும் தனது பொருளாதார வளர்ச்சியைக்கொண்டே அரசின் செயல்பாடுகளை அளவிடுகிறான். ஏதேனும் ஒரு காரணத்தைக்கூறி மக்களை உசுப்பேற்றி, ஆட்சிக்கு வரும் காலம் முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. பெரும்பான்மை மக்கள் அப்படியான உணர்வுகளுக்கு இடமளிப்பதில்லை. உதாரணமாக தேசபக்தியை என்னிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒரு கட்சி, நாட்டிற்கு, மக்களுக்கு, எனக்கு என்ன செய்தது என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகின்றனர். அதுவும் ஆளும்கட்சியை நோக்கி மக்கள் இக்கேள்வியை வைக்கும்போது ஆட்சியாளர்களுக்கு நடுக்கம் ஏற்படுகிறது. அதுதான் கடந்த இரண்டு நாட்களாகப் பரவிய #Say_no_to_War என்ற தொடுப்பானின் பின்னால் இருக்கும் அரசியல்.

(தொடரும்)

Please follow and like us:

  • 2
  • Share

Leave a Reply

Close Menu