ஆயுதப்போர் வழியே தீர்வு – சாத்தியமா? – பாகம் – இரண்டு

Please follow and like us:

  • 2
  • Share

ஆயுதப்போரும் அதன் விளைவுகளும்

ஆயுதப்போர் யாருக்கும் வெற்றியைத் தருவதில்லையே. ஏன்?

காரணம் ஒன்றுதான் – பொருளாதாரம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து பனிப்போர் ஆரம்பித்த காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் இரண்டுமே உலகை அழிக்கும் அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டிருந்தன. ஆகவே வெறும் மிரட்டலுக்கு மட்டுமே ஆயுதங்கள் பயன்பட்டன. அப்போது ஆயுதத்தைக்கொண்டு போர் (war by weapon) என்ற நிலையில் இருந்து மாறி இருவருமே கருத்தியல் போர்களில் (Ideological war) ஈடுபடத்தொடங்கினர். ஒருபுறம் முதலாளித்துவ சிந்தனையை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முயன்றுகொண்டிருக்க, சோவியத் கம்யூனிசக் கொள்கைகளை முன்னிறுத்தியது. எகிப்து, க்யூபா, ஜெர்மனி, தென்னமெரிக்க நாடுகள், கொரியா, பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளை யார் ஆதிக்கத்தின்கீழ் வைத்திருப்பது என்ற மோதலில் இரு வல்லரசுகளும் ஈடுபட்டன. இருவரும் தங்கள் கருத்தியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றனர். அதன் ஒருபகுதியாக மேற்கண்ட நாடுகளில் இருந்த குழுக்கள், அரசுகள் ஆகியவற்றிற்கு ஆயுதங்களை வழங்கினர். நன்றாகக் கவனித்தால் சோவியத், அமெரிக்க நாடுகள் வல்லாதிக்க அரசியல் மட்டுமே செய்துகொண்டிருக்க அவர்களது ஆயுதங்கள் பல்லாயிரம் மக்களைக் கொன்றழித்தன. இப்போட்டியில் சோவியத் தொடர்ச்சியாக வென்றுவந்தது.

பொருளாதாரப்போர்

ஆயுதப்போர் என்பது எப்போதுமே ஆயுதமற்றவர்களுக்கு (ஆயுத பலமற்றவர்களுக்கு) எதிராகப் பயன்படுத்தப்படுவது. பெரும் பொருளாதார விளைவுகளை உருவாக்குவது. இவற்றையெல்லாம் அறிந்திருந்தும், கணக்கிட்டும் அமெரிக்கா முன்னெடுத்த வியட்நாம் போர் அந்நாட்டிற்குக் காலத்தால் மறக்கவியலாப் பாடம் ஒன்றைக் கற்பித்தது. வியட்நாமில் தோல்வியடைந்த அமெரிக்கா அங்கு ஆயுதப்போரைக் கைவிட்டதும், தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதாரத் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இப்படித்தான் இது கருத்தியல் போர் என்ற நிலையில் இருந்து பொருளாதாரப்போராக (Economic war) மாறியது. ஒருவர் பொருளாதாரத்தை இன்னொருவர் அழிப்பதுதான் நோக்கம்.

தான் அரசியல் ரீதியாக ஆதரித்துவந்த நாடுகளிடம் இருந்து குறிப்பிடும்படியான பொருளாதாரப்பலன்கள் எதையும் பெறாத சோவியத் யூனியன், ஒருகட்டத்தில் அந்நாடுகளுக்காகத் தான் செய்துவந்த செலவுகளைக் குறைக்க ஆரம்பித்தது. இன்னொருபுறம் அமெரிக்காவில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றம் பொருளாதார ரீதியான வெற்றிகளை அந்நாட்டிற்கு வழங்கியது. மேலும் மத்தியகிழக்கில் ஐரோப்பியர்கள் வசம் இருந்த எண்ணெய் வயல்களை அமெரிக்கா தன்வசமாக்கிக்கொண்டது. இதற்காகப் பல ஆட்சிக்கவிழ்ப்புகள், ஆயுதப்போராட்டங்கள் அந்நாடுகளில் உருவாக்கப்பட்டன. ஒருபுறம் ஆயுத வருமானம், இன்னொருபுறம் எண்ணெய் வருமானம் என்று கொழித்தது அமெரிக்கா. அந்நாடுகளில் எல்லாம் பொம்மைகளை ஆட்சியாளர்களாக நியமித்து அடுத்த பல ஆண்டுகளுக்கான தனது நிதி வருவாயை உறுதிசெய்தது. அண்டை நாடுகளில் சோவியத் யூனியனிற்கு எதிராக பல்வேறு ஆயுதக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதுபோன்ற பொருளாதாரம் சார்ந்த போர் நடவடிக்கைகளில் பின்தங்கிய சோவியத் யூனியன் கடந்த நூற்றாண்டின் இறுதியில் உடைந்து சிதறியது.

உலகநாடுகள் முதலாளித்துவ சிந்தனைகளை வேகமாக உள்வாங்கிக்கொண்டன. கட்டற்ற வளர்ச்சி என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டது. ஏற்கனவே தனக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்கள் வாயிலாக, எந்த நாட்டிடம் அணு ஆயுதம் இல்லையோ, எந்தவொரு நாட்டின்மீது பொருளாதாரப்போர், கருத்தியல் போர் தொடுக்கமுடியாதோ (அ) வழியில்லையோ, எங்கு ஆட்சிக்கவிழ்ப்பு சாத்தியமில்லையோ அங்கு மட்டுமே ஆயுதப்போர் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டினை எடுத்தது அமெரிக்கா.

அந்நிலையில் அமெரிக்கா சோவியத்திற்கு எதிராக உருவாக்கிய இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் அவர்களுக்கே தலைவலியாக உருவெடுத்தன அல்லது அவர்கள் இனி அமெரிக்காவிற்குத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது. பெரிய நிதியாதாரமோ, வளங்களோ இல்லாமல் அரசு அமைப்புகளை உருவாக்கி இயங்கிவந்த தலிபான்களை அழிப்பதற்குப் பொருளாதாரப்போர் சரியான வழிமுறையில்லை என்பதால் ஆயுதப்போரில் குதித்தது அமெரிக்கா. ரஷ்யாவிற்கு அருகில் இராணுவத்தளங்களை அமைப்பதும், மத்தியகிழக்கில் இருக்கும் எண்ணையைச் சுரண்டுவதும், தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதும் அவர்களின் இதர நோக்கங்கள். இவ்வளவிற்கும் பிறகு தலிபான்களுடனான போர் கிட்டத்தட்ட அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கீழே தள்ளியது. அமெரிக்க அரசிற்கு நஷ்டத்தையும் ஆயுத வியாபாரிகளுக்கு வருமானத்தையும் ஈட்டித்தந்த போர் அது. அடுத்தகட்டமாக அமெரிக்கர்கள் வருமானம் வரக்கூடிய நிலத்தை நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்பினர் – அதுதான் ஈராக்.

எண்ணெய் வளம்கொண்ட நாடான ஈராக்கிடம் அணு ஆயுதங்கள் ஏதும் இல்லை. அதேசமயம் அங்கு ஆட்சிக்கவிழ்ப்பும் சாத்தியமில்லை. உடனே வேதி ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் ஆகவே அவர்கள்மீது போர் தொடுக்கிறோம் என்று அறிவித்தார்கள். கிட்டத்தட்ட இன்னொரு வீட்டைக் கொள்ளையிடும் முயற்சிதான் அது. அதில் பெரும் செலவுசெய்து வெற்றிபெற்றனர். தற்போது பொம்மை ஆட்சி நடைபெறும் அந்நாட்டில் இருந்து அமெரிக்கா வருமானம் பெற்றுவருகிறது. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளில் இப்போர்களுக்காக அமெரிக்கா செலவு செய்துள்ள பணம் மீண்டும் அந்த அரசிற்கு வந்துசேர இன்னும் பல்லாண்டுகள் ஆகும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

ஆப்கானிஸ்தான், ஈராக் மீதெல்லாம் அத்துமீறிப் போர் செய்யும் அமெரிக்கா அருகில் இருக்கும் ஈரான்மேல் பொருளாதார, கருத்தியல் போர்களை மட்டுமே செய்துகொண்டிருப்பது ஏன்?

வடகொரியாவுடன் சமாதானப் பேச்சுகளில் ஈடுபடுவது ஏன்?

சீனாவிடம் அமெரிக்கா அடக்கி வாசிப்பது ஏன்? என்பதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் ஒன்றுதான்.

அவர்களிடம் எல்லாம் அணு ஆயுதம் உள்ளது. போர் ஏற்பட்டு யார் அணு ஆயுதப்பொத்தானை அழுத்தினாலும் உலகம் அழிவது உறுதி. ஆகவேதான் ‘போர்’ ‘போர்’ என்று கூவும் அமெரிக்கா ‘உலக அமைதி’, ‘பேச்சுவார்த்தை’, ‘தீர்வு’ என்று முனங்கிக்கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் அறியாமல் சிலரும், அறிந்திருந்தாலும் அயோக்கியத்தனமாக சிலரும் பாகிஸ்தான்மீது போர் தொடுக்கச்சொல்லி இங்கே கூப்பாடுபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய-பாகிஸ்தான் பிரச்சினை – எதிர்காலம் என்ன?

இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். பாகிஸ்தான்மீது இந்தியா போர் தொடுத்தால் இந்தியாவிற்குப் பொருளாதாரரீதியாக என்ன பலன்கள் கிடைக்கும்?

இரு அணு ஆயுத நாடுகள் மோதிக்கொண்டால் ஏற்படப்போகும் விளைவுகள் என்னென்ன?

அதைச் சர்வதேச சமூகம் அனுமதிக்குமா?

பாகிஸ்தானைத் தாக்குவதால் இந்தியாவிற்கு எள்ளளவும் லாபமில்லை. பொருளாதாரப் பலன்களற்ற போரை எந்த நாடும் முன்னெடுக்காது. இரு அணு ஆயுத நாடுகளுக்குள் பதற்றம் நிலவுவதை சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டிருக்காது. அணு ஆயுதப்போரின் விளைவு அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்பதால் கடுமையான பொருளாதாரத் தடைகள் இரு நாடுகளின்மீதும் விதிக்கப்படலாம். அத்தகைய தடைகள் பாகிஸ்தானை எந்த அளவிற்குப் பாதிக்குமோ, அதைவிடப் பல மடங்கு இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். இறுதியில் நஷ்டம் நமக்குதான். இதையெல்லாம் ஆய்ந்து அறிந்த அரசு அண்டை நாட்டிற்கு எதிராய் ஆயுதப்போரை முன்னெடுக்காது.

சரி. தீவிரவாதத் தாக்குதல்கள், அண்டை நாட்டின் அத்துமீறல்களைப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டுமா?

இல்லை. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். ஆனால் என்னமாதிரியான நடவடிக்கை என்பதில் வித்தியாசம் இருக்கிறது. ஆயுதப்போர், கருத்தியல் போர், பொருளாதாரப்போர் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது சர்வதேச சமூகத்திடம் கருத்தொருமையை உருவாக்கி ஒரு நாட்டின்மீது அழுத்தம் ஏற்படுத்துவதை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். இம்ரான்கான் அபி நந்தனை விடுவித்திருக்கும் நடவடிக்கை அப்படிப்பட்டதுதான். நீங்கள் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவரது முடிவு மிகச்சிறப்பான அரசியல் காய் நகர்த்தல். இன்றைய பாகிஸ்தான் புதியது, அமைதியை, வளர்ச்சியை, ஜனநாயகத்தை முன்னிறுத்திச் செயல்படுவதே எங்கள் நோக்கம் என்று சர்வதேச சமூகத்திற்கு அழுத்தமாகக் கூறிவிட்டார். அவ்வகையில் இந்திய அரசு இதுவரை இல்லாத வகையில் தோல்வியுற்று நிற்கிறது.

இந்தியா பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. பாகிஸ்தான் எவ்வகையிலும் இந்தியப் பொருளாதாரத்திற்கும், அதிகாரத்திற்கும் சவால்விடும் நிலையிலுள்ள நாடு கிடையாது. மாறாக, தனது பொருளாதார வளர்ச்சியின் வழியே உலக நாட்டாமையான அமெரிக்காவை நடுங்கச்செய்துவரும் சீனாவைத்தான் நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சி, சர்வதேச அதிகார அமைப்புகளில் இடம்பெறுதல், பேச்சுவார்த்தை வழியே அதிகாரத்தை நிலைநாட்டுதல், சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு நிலைத்த இடம் ஒன்றை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே நமது நாட்டை மேலெழச் செய்ய முடியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக மாட்டுக்கறித் தடை, அமைப்புகளைச் சிதைத்தல், அரசியல் போட்டியாளர்களை வசைபாடுதல், கேள்விகேட்பவர்களை தேசதுரோகி என்று கூறுதல், விளம்பரமோகம், சனாதனத்தை நிலைநாட்ட முயற்சி செய்வது, பிற மத வெறுப்பு ஆகியவைதான் பாஜக அரசின் நோக்கங்களாக உள்ளன. இவற்றிற்கெல்லாம் ஜனநாயகம் என்ற அமைப்பு தடையாய் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஆகவே அதை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் பணமதிப்பிழப்பு போன்ற பொருளாதார அழிப்பு நடவடிக்கைகளைப் பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல் செய்வதும், பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருப்பதும், ராணுவ இழப்பை வைத்து ஒட்டுக்கேட்பதும்தான் பாஜகவின் ஐந்தாண்டு காலச் சாதனைகளாக உள்ளன.

ஆகவே அவர்கள் தங்கள் தேர்தல் வெற்றிக்காகப் பாகிஸ்தான் போரைக் கொண்டுவரவும் தயங்கமாட்டார்கள். அப்படி நடந்தால் இந்தியா பெரும் உயிர், பொருளாதார இழப்புகளைச் சந்திக்கும்.

ஆகவே இந்தியர்களாகிய நாம் உரக்கச்சொல்வோம்.

‘போர் தீர்வல்ல’

‘போர் வேண்டாம்’

‘போரே நீ போ!’

 

இக்கட்டுரையின் முதற்பாகம்

Please follow and like us:

  • 2
  • Share

Leave a Reply

Close Menu