ஆட்டிசம் சில புரிதல்கள் – துலக்கம் – ஒரு பார்வை

Please follow and like us:

 • 2
 • Share

ஆட்டிச நிலையாளர்களின் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் யெஸ்.பாலபாரதி அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற அபுனைவையும் – ‘துலக்கம்’ என்ற புனைவையும் எழுதியுள்ளார்.

நமது சமூக அமைப்பு, எல்லோருக்குமான வெளியை எப்போதுமே வழங்கி வந்திருக்கிறதா? ஒவ்வொரு குடும்பத்திலும் மன, உடல், சமூக குறைபாடுகளைக் கொண்ட ஒருவராவது இருந்துள்ளனர். அவர்களை இரண்டாம் நிலை மனிதர்களாக அந்தக் குடும்பம்/சமூகம் நடத்திவந்திருக்கிறது. சமூகக்குறைபாடுகள் மட்டுமே கொண்ட மனிதர்கள் (socially unadjusted human) மற்ற இரு வகையினரையும்விட குறைவாகப் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக திருமணம், குழந்தைகள் என்று அனைத்தும் கொண்டு, ஆனால் தன்முனைப்போடு பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல், தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து, இறந்து போன மனிதர்களை ஒவ்வொரு குடும்பமும் கண்டிருக்கிறது. அவர்களை மனக்குறைபாடு கொண்டோர் என்றோ, உடற்குறைபாடு கொண்டோர் என்றோ சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் தங்களின் தொடர்பியல்[1] வழிமுறையில் வித்தியாசம் கொண்ட தன்முனைப்புக்குறைபாட்டுநிலை மனிதர்களை, கற்றல் திறன் சவால் கொண்டோரை, சிறப்புக் குழந்தைகளை நாம் மிகக்கடுமையாக ஒடுக்கிவருகிறோம். உண்மையில் படிக்காதவர்களைவிட படித்தவர்கள்தான் இத்தகைய ஒடுக்குதல்களை அதிகம் செய்கிறார்கள்.

ஒரு குழந்தை மீது அதிக வன்முறை செலுத்துபவர்கள் என்று பெற்றோரையும், அடுத்து ஆசிரியர்களையும் சொல்லலாம். அவர்களின் முக்கியமான வன்முறை – எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு என்பதுதான் தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளின் மிகப் பெரும் சவால். தொடர்பு மொழியில் இருக்கும் சிக்கல்களால் அவர்கள் நினைப்பதைச் சொல்லிவிட முடியாது, அது மிகப்பெரிய பிரச்சினையாகப் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் மாறுகிறது.  யோசித்துப் பாருங்கள். குழந்தை இருக்கும் வீட்டிற்குப் போனாலே அங்கிளுக்குப் பாட்டுப் பாடிக்காட்டு, டான்ஸ் ஆடிக் காட்டு, முத்தம் கொடு என்று சித்ரவதை செய்வதைப் பார்க்கிறோம் அல்லது நாமே செய்கிறோம். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட இந்த மூன்று செயல்களுமே தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளை பதட்டமடையச் செய்பவை. அவர்கள் அதைச் செய்யாதபோது, அது ஒரு அந்தஸ்துக் குறையாக (status issue) மாறி பெற்றோரைப் பதட்டமடையச் செய்கிறது. கூடுதலாக அந்தக் குழந்தைக்குத் தண்டனையும் கிடைக்கும். அதேபோல் ஆசிரியர்கள் சராசரிப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களை இவர்களுக்குச் சொல்லி சராசரி அளவேயான மறுமொழியை, மதிப்பெண்ணை எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமாகாதபோதும், தண்டனைகளே கிடைக்கின்றன. இவையெல்லாமே சராசரிக் குழந்தைகளைப் பாதிக்கும் அளவைவிட ஆட்டிசக் குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன.

ஆட்டிசம் சில புரிதல்கள் புத்தகத்தில், தன்முனைப்புக்குறைபாடு, அதன் அறிகுறிகள், உட்பிரிவுகள், மென்னுணர்வு [2] மிக்க தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளிடம் நாம் மாற்றவேண்டிய விஷயங்கள் என்ன? பெற்றோரான நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? அவர்களுக்கான உணவு என்ன? என்பதைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்தப் புத்தகம் நிச்சயமாக ஒரு மைல்கல்தான்.

இப்புத்தகம் யாரைச் சென்றடைய வேண்டும்? முதலில் ஆசிரியர்களை, பின் பெற்றோர்களை. நமது கல்வி அமைப்பு என்பது அடிப்படைப் புரிதல்கள் ஏதுமற்ற மதிப்பெண் அளவீடுகள் கொண்ட தட்டைப் பரப்பாக மாறி 30 வருடங்களாகிறது. அவற்றின் பரிணாம வளர்ச்சிதான், இன்று நாம் காணும் ப்ராய்லர் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் கற்றல் அறிவியல், கற்றல் திறன் சவால், மாணவர் மனநிலை குறித்து கல்லூரிகளில் படிப்பதோடு சரி, அதன்பின் அவற்றை பயன்படுத்துவதோ, தொடர்ந்து அவற்றில் நடக்கும் கண்டுபிடிப்புகளை அறிந்துகொள்வதோ கிடையாது – ஆனால் இவர்கள் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் ஒப்பீட்டளவில் குறைவான சேதாரத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துபவர்கள். தனியார் பள்ளிகளில் இன்னும் மோசம், முறையான கல்விப் பயிற்சியோ, உளவியலோ இல்லாத பெரும்பாலோர் ஆசிரியராக இருக்கின்றனர். அதையும் மீறி ஆசிரியர் ஒருவர் செயல்பட முயன்றால் அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்து வெளியே துரத்தப்படுவது நிச்சயம். மதிப்பெண் எடுக்க வை, இல்லாவிட்டால் வெளியே போ என்பதுதான் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் வாய்ப்பு. உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் ஏதேனும் ஓர் ஆசிரியரிடம் மேலே சொன்ன பிரச்சனைகள்பற்றிக் கருத்துக் கேளுங்கள்.

ஆசிரியர்கள் இப்புத்தகத்தைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் – அவர்கள்தான் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அவர்கள் மூலமே பெரும்பாலான தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மக்கள்தொகை அதிகரிப்பின் விகிதாச்சார அடிப்படையில்[3] தன்முனைப்புக்குறைபாட்டுக் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இனி இந்தக் குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு நாம் சமூகத்தில் வாழ்ந்துவிட முடியாது எனும் நிலையில் அவர்களுடைய உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டியது கட்டாயம்.

இனி துலக்கம்பற்றி – துலக்கத்தின் கதை மிக எளிமையானது. அஸ்வின் என்ற ஒரு சிறுவன் காணாமல் போகிறான். அவன் ஒரு ஆட்டிச நிலையாளன். அவனைச் சமூகம், சட்ட அமைப்பு, சக மனிதர்கள், பெற்றோர், மருத்துவர்கள் என ஒவ்வொருவரும் எப்படிப் பார்கின்றனர், அவன் இவர்களை எப்படிப் பார்க்கிறான், எதற்காக அவன் வெளியேறினான் என்பதன் வழியே கதை நகர்கிறது. கதை இயல்பான வெகுஜன மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. யெஸ்.பாலபாரதியின் கடந்தகால படைப்புகளில் தெரியும் ஆழமோ, கவித்துவமோ இந்தப் புத்தகத்தில் இல்லை அல்லது வேண்டுமென்றே முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது. ‘ஆட்டிசம் – சில புரிதல்கள் புத்தகம்’ மூலம் எதிர்பார்த்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் சென்றடையவில்லை, எனவேதான் துலக்கம் எழுதப்பட்டது என்று புத்தக வெளியீட்டில் யெஸ்.பாலபாரதி கூறியிருக்கிறார். இங்கேதான் அபுனைவிற்கும் புனைவிற்குமான சாத்தியங்கள் வேறுபடுகின்றன.

புனைவு தரும் கற்பனைச் சாத்தியங்கள் – அபுனைவு எழுத்தில் சாத்தியமில்லை, அதனாலேயே பொதுவாக புனைவற்ற படைப்புகள் மக்கள் மனதை எளிதில் வசீகரிப்பதில்லை. ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற நோக்கம் சார்ந்த படைப்புகள் பெரும்பாலும் அபுனைவாகவே எழுதப்படுகின்றன. அதனாலேயே பிரச்சார எழுத்துக்களை இலக்கிய வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது என்று தூயஇலக்கியவாதிகள் காலங்காலமாகச் சொல்லி வருகின்றனர். ஆனால் மார்க்சியப் பார்வையில் இலக்கியம் அதன் அழகுணர்ச்சி சார்ந்து மதிப்பிடப்படுவதைக் காட்டிலும் சமூக/அமைப்பியல் மாற்றம் என்ற அளவீட்டில் வைத்தே அளவிடப்படுகிறது. தீவிர மார்க்சியர்கள் அழகுணர்ச்சியை முற்றிலும் நீக்கிவிட வேண்டும் என்று கூடச் சொல்லி இருக்கின்றனர். அதேசமயம் பேசப்படும் கருத்து பன்முகத்தன்மையுடன், விரிந்து-விவாதித்து எழுதப்பட்டிருக்க வேண்டும். துலக்கம் கூட – தூய்மைவாத இலக்கிய அளவீடுகள் அடிப்படையில் அல்லாமல், மார்க்சிய இலக்கிய அளவீட்டில் வைத்தே அளவிடப்பட வேண்டும்.

அவ்வாறு மதிப்பிட்டால், துலக்கம் ஒரு சமூகத்தேவைக்கான படைப்பு. இங்கே இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டியது இருக்கிறது. உடனடியாக விழிப்புணர்வை ஏற்படுத்த அபுனைவைவிட சிறந்த வடிவம் இல்லை. அதேசமயம் நிறையப் பேரைச் சென்றடைய புனைவு மிக முக்கியமாகிறது – ஆனால் அது பெரும் உழைப்பைக் கோரும் விஷயம். பல அடுக்குகளைக்கொண்ட இலக்கியம் என்பது நிகழ்வை, சமூகக்கட்டமைப்பை, வக்கிரங்களை, வன்மத்தை, எதிர்பாராமையை, உன்னதத்தைச் சொல்லி வாசகனின் மனதில் நீண்டகால அடிப்படையில் நிலையான மாற்றங்களை உருவாக்கக்கூடியது. அது விழிப்புணர்வு என்ற தளத்தில் மட்டும் இல்லாமல், வரலாற்றில் நடந்திருக்கும் ஒரு மோசமான நிகழ்வை, என்ன நடந்திருக்க வேண்டும் என்று சொல்லுவதன் வழியே, எதிர்காலத்தில் அது மீண்டும் நடக்காமல் இருக்கச் செய்யும் முயற்சி. விளிம்புநிலை மனிதர்கள் என்று சொல்லி மனநலம் குன்றியோர்களை, திருடர்களை, பாலியல் தொழிலாளிகளை காட்சிப்படுத்தும் இலக்கிய முயற்சிகள் அதிர்ச்சியை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அது தேவையும் கூட. ஆனால் அதே விளிம்பின் விளிம்பில் இருக்கும் கற்றல் திறன் குறைந்தோர், ஆட்டிச நிலையினர், விவசாயிகள், பாலியல் சிறுபான்மையினர்பற்றிய எழுத்துகள் மிகக் குறைவு – ஏனென்றால் அவை தரும் அதிர்ச்சி பாலியல் கிளர்ச்சியையோ, சாகசத்தையோ முன்வைப்பதில்லை. இவைதவிர, அத்தகைய அதிர்ச்சிகளை நாம் காணவும், கேட்கவும் விரும்புவதில்லை.

அஸ்வின் நம்முடைய சட்ட அமைப்பில் எப்படி நடத்தப்படுகிறான் என்பதைச் சொல்லும் இக்கதையில், அந்த அமைப்பு ஆட்டிச நிலையோரை மட்டும் அல்ல, யாரையுமே எப்படி நடத்துகிறது? என்ற கேள்வி எழுகிறது. ஏன் அமைப்பு அவ்வாறு நடக்கிறது? அஸ்வினின் உள்உலகம் என்ன? அவனுடைய அடிப்படை விருப்பு வெறுப்புகள், இந்த சமூகத்தை எப்படிப் பார்க்கிறான், அவனுடைய பெற்றோருக்கும் சராசரிப் பெற்றோருக்கும் இருக்கும் மனநிலை மாறுபாடுகள், பள்ளியில் அவனுக்கு இருக்கும் சவால்கள், ஆசிரியர்களுக்கு இருக்கும் சவால்கள், அவனுக்கும் அவன் நண்பர்களுக்குமான உறவு, அவனுக்கும் அவன் உடன் பிறந்தோருக்குமான உறவு, உடல் சார்ந்த அவனுடைய சவால்கள் – முக்கியமாக பதின் வயதில் ஏற்படும் பாலியல் கொந்தளிப்புகள், காதல், நெருங்கியோர் மரணம் போன்ற சவால்களை எதிர்கொள்வது என்று எண்ணற்ற பக்கங்களைக் கொண்ட ஒரு நாவல் இந்தக் கதையில் இருக்கிறது. அதே சமயம் ஓர் ஆட்டிசக்குழந்தை பெண்ணாயிருந்து அவள் இவற்றை எப்படிச் சந்திப்பாள்? என்று எழுதினால் அது முற்றிலும் வேறான நாவலாக இருக்கும். விழிப்புணர்வு என்ற ஒரு பார்வையை மட்டும் முன்வைப்பதால், மிகச் சுருக்கமாக மேலே சொன்ன விசயங்களில் சிலவற்றை மட்டுமே சொல்லி, பலவற்றைத் தவிர்த்து இருக்கிறார்.

இந்தப் புத்தகங்களுடன் பார்க்க வேண்டிய படம் என்று – Forrest Gump – திரைப்படத்தைச் சொல்லலாம். பாரெஸ்ட் ஒரு ஆட்டிசநிலையினன். இருந்தும் சிறப்புக் குழந்தையான அவன் எப்படித் தன் வாழ்வின் சவால்களை எதிர்கொள்கிறான் என்று மிகச் சிறப்பாகச் சொல்லி இருப்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு படியிலும்,  நிகழ்விலும் அவனுடைய முழுப்பங்களிப்பு இருக்கும். வேறெதைப்பற்றியும் அவன் கவலை கொள்வதில்லை. அவனுக்குத் தேவை – தன்னைப் புரிந்தவர்கள். அதேபோல, அவனுக்கு எல்லாமும் புரியும். அவனுக்குப் புரிந்ததாக அவன் சொல்வதில்லை. அவன் நல்ல மகனாக, நல்ல நண்பனாக, நல்ல காதலனாக, நல்ல குடிமகனாக, நல்ல தோழனாக, நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக இருக்க முடிகிறது. அது சராசரியாய் இருக்கும் பெரும்பாலோரால் செய்ய முடியாத சாதனை அல்லவா? அவ்வளவு பெரிய சாதனையாளனான அவன் சொல்வதைபோலவே – I’m not a smart man… but I know what love is – ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையும் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, Try to understand me, Nothing else.[4]

மார்க்சிய இலக்கியப் பின்னணி கொண்ட யெஸ்.பாலபாரதி, எரியும் பனிக்காடு, சோளகர் தொட்டி போன்று அழகியலைவிடக் கருத்தியல் பார்வையை முன்வைக்கும் – அதே நேரத்தில் பன்முகங்கள் கொண்ட ஒரு படைப்பை விரைவில் தருவார் என்று நம்பலாம்.

புத்தகங்கள்:

 1. ஆட்டிசம் சில புரிதல்கள்

வெளியீடு: புக் ஃபார் சில்ரன்

விலை: 50 ரூபாய்

 1. துலக்கம்

வெளியீடு: ஆனந்தவிகடன்

விலை: 85 ரூபாய்

 1. தொடர்பியல் – Impart information & the way of expression – என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளேன். (communication அல்ல)
 2. மென்னுணர்வு – மென்மை உணர்வு என்ற அடிப்படையில் நான் உபயோகிக்கவில்லை. They could be cognitively disturbed without any external reason. – எளிதில் பாதிப்படையக்கூடிய/சமநிலை இழக்கக்கூடிய – என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளேன்.
 3. http://en.wikipedia.org/wiki/Epidemiology_of_autism
 4. எந்தச் சிறப்புக் குழந்தையும் மேதையோ, முட்டாளோ அல்ல. ஆனால் அவர்கள் மற்றெல்லாக் குழந்தைகளையும் போல (கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படும்) சராசரிகள்தான் என்று புரிந்து கொள்ளவே ஃபாரஸ்ட் கம்ப்-ஐ உதாரணமாகச் சொல்லியிருக்கிறேன்.
 5. யெஸ்.பாலபாரதியின் வலைப்பூக் கட்டுரைகளை இந்த இணைப்பில் படிக்கவும்.

Please follow and like us:

 • 2
 • Share

Leave a Reply

Close Menu