அறிமுகம்

ஜி.சரண் @ சரவணன் பார்த்தசாரதி, 1982ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தேன். சொந்த ஊர் – ஒக்கூர். அப்பா – ச.பார்த்தசாரதி, அம்மா – ராம.கௌரி. அம்மா –ஆசிரியை. அப்பா – நடத்துனர்.அரசு ஊழியர்களான இருவரும் ஓய்வுபெற்றுவிட்டனர்.

பெரியாரியரான அம்மா – தீவிர வாசிப்பாளர். இலக்கியம், கல்வி, அரசியல், பெரியாரியம், மார்க்சியம் தொடர்பான புத்தகங்கள் அம்மாவின் வழியே எனக்கு அறிமுகமாயின.

உளவியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரான அப்பா அத்துறையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். வீட்டில் நாங்கள் மூவர் மட்டுமே என்பதால் மேற்கண்ட விஷயங்கள் தவிர்த்து வேறெதற்கும் இடம் இருந்ததில்லை.

சிறு வயதில் சோவியத் சிறார் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒன்பதாம் வயதில் ஒக்கூர் கிளை நூலகத்தில் நூலகராக இருந்த திரு.குருசக்தி கணபதி அறிமுகமானார். அதன்பிறகு சுமார் இருபது ஆண்டுகள் அங்கே பணியாற்றிய அவர் நான் கேட்கும் எண்ணிக்கையில் புத்தகங்களைக் கொடுத்து என் வாசிப்பைத் தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தினார்.

பள்ளி எனக்கு ஆர்வம்தரும் இடமாக இருந்ததேயில்லை. பாடங்களை மனனம் செய்து எழுதுவது என்பது கொடும் தண்டனையாக இருந்தது. பாடம் குறித்த என் புரிதலை என்னுடைய சொற்களைக்கொண்டு விடைத்தாள்களில் நான் எழுதிவந்தேன். அது ஆசிரியர்களுக்கு என்மேல் பெரும் எரிச்சலை ஏற்படுத்த, அவர்கள் என்னை விலகளோடு அணுகத்தொடங்கினர். கற்றல் என்பது புத்தகத்தில் இருப்பதைத் திரும்ப எழுதுவது அல்ல என்ற புரிதல் உண்டானது.

இதற்கு நேர்மாறாகப் பெரியாரியக் கூட்டங்கள், மார்க்சிய வகுப்புகள் எனக்கு ஆர்வம் அளிப்பவையாக இருந்தன. விமர்சிக்கவும், முரண்படவும், என்னுடைய சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்தவும் ஏற்ற ஒரு சூழல் அங்கே நிலவியதே அதற்குக் காரணம். பதின்ம வயதுகளில் என் பெற்றோர், அவர்களின் நண்பர்கள், ஈழப்போரால் பாதிக்கப்பட்டு இந்தியா வந்த முன்னால் போராளிகள் ஆகியோருடன் விவாதித்து எனக்கான வெகுஜன அரசியல் கருத்துகளை உருவாக்கிக்கொண்டேன்.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகு தீவிர இலக்கியப் படைப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து மென்பொருள் நிறுவனங்களில் வேலை. இடையில் ஒருமுறை வெளிநாடொன்றில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு தவறியது. பிறகு சர்வதேசத்தொழில் மேலாண்மை, திட்ட மேலாண்மை, உளவியல், மருத்துவ சமூகவியல், கணிப்பொறியியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றேன். சிறு வயதில் கற்றல் திறன் சவால் கொண்டிருந்ததால்,தற்போதுஉளவியல் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான ஆராய்ச்சியில்ஈடுபட்டுள்ளேன்.சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதை அதன் ஒரு பகுதியாக வைத்திருக்கிறேன்.

கல்வித்திறன் மேம்பாடு சார்ந்த பயிற்சிகளை வழங்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறேன். நவீன கல்வி, அறிதல் முறைகள், இலக்குகளை அமைத்தல், அவற்றைத் தொடர்தல் போன்ற விஷயங்கள் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அந்நிறுவனத்தின் நோக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக வலைப்பூவில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதிவந்த நிலையில், எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்களைச் சந்தித்துப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் என்னை எழுத்துத்துறைக்கு அழைத்து வந்தார்.‘எப்படி எழுதுவது’ என்பதில் ஆரம்பித்து ‘படைப்பைச் செப்பனிடுவதுவரை’ துறைசார்ந்த நுட்பங்கள் அனைத்தையும் அவர்தான் எனக்குக் கற்பித்து வழிகாட்டிவருகிறார். அவ்வகையில் அவரே எனது ஆசிரியர்.

என்னுடைய புத்தகங்களைப் பாரதி புத்தகாலயமும் மற்றும் வானம் பதிப்பகமும் வெளியிட்டு வருகின்றன.

தொடர்புக்கு: writergsaran@gmail.com

Close Menu