அஞ்சலி: சரோஜா -ஆசிரியை

Please follow and like us:

  • 0
  • Share

எழுபது வயது நிரம்பிய என் அப்பாவை ‘டேய் பார்த்தசாரதி’ என்று அழைக்கக்கூடிய வெகுசில நபர்களில் ஒருவரான ஆசிரியை சரோஜா (29/03/2019) அன்று அதிகாலை காலமானார். அப்பாவிற்கும், எனக்கும் ஆசிரியையாக இருந்தவர். பதினேழு வயது சிறுமியான என் அம்மா ஆசிரியப்பணியில் இணைந்த காலத்தில் அவருக்குப் பேருதவி புரிந்தவர். அம்மாவின் குடும்ப நண்பரும்கூட.

அப்பத்தா என்று நான் அழைத்த ஒரே நபர். மூன்றாம் வகுப்பில் அவர் எனக்கு அளித்த கருப்பும் சிவப்புமான நடராஜா பென்சில்தான் கல்விக்காக நான் பெற்ற முதல் பரிசு. பள்ளி நாடகத்தில் என்னை இளங்கோவடிகளாக நடிக்கச்செய்தவர். அவர்கள் வீட்டில்தான் ஆனந்த விகடனும், குமுதமும் எனக்கு அறிமுகமாயின. எந்நேரம் வேண்டுமானாலும் அவர்கள் வீட்டிற்குச் செல்லும் உரிமை எனக்கிருந்தது. எனது ஒவ்வொருகட்ட வளர்ச்சியையும் கண்டு மகிழ்ந்தவர் அவர். நான் சில சிக்கல்களைச் சந்தித்தபோது அதற்காக மனதார வருந்தியவர்.

அவரது கணவர் திரு.பரமசிவம் – தமிழகத்தின் திறன் வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுள் ஒருவர். வேறொரு பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு, எங்கள் பள்ளியில் நடைபெற்ற மாவட்டப்போட்டிகளை ஒற்றை நபராக இருந்து நடத்திக்காட்டியவர். வேட்டையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். எங்கள் ஊர் நூலகத்தின் புரவலர், வாசிப்பாளர். ஒருவன் தன் மனைவியை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தாத்தாவிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். அவர் தன் வாழ்நாள் முழுக்க அப்பத்தாவைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் காலமானபோது, அப்பத்தா இனி நீண்டகாலம் இருக்கப்போவதில்லை என்று நான் நினைத்திருந்தேன்.

அப்பத்தா – யாருக்கும் எவ்விதக் கெடுதலையும் மனதாலும் நினைக்காத ஓர் உன்னதப்பிறவி . சுமார் நாற்பது ஆண்டுகால ஆசிரியப்பணி அவருடையது. அவர் யாரையும் அடித்தோ, கடிந்துகொண்டோ நான் பார்த்தில்லை. இனி இப்படியான மனிதர்களை, ஆசிரியர்களை நான் சந்திக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை.

எனக்கு ஒரு வயதானபோது, நாங்கள் இப்போதிருக்கும் வீட்டைக் கட்டி முடித்துக் குடியேறினோம். அப்போது அப்பத்தா வீட்டில் இருந்த மல்லிகைச் செடி ஒன்றைக் கொண்டுவந்து நட்டோம். அந்தச் செடி அதே இடத்தில் இன்றும் உள்ளது. ஆனால் அப்பத்தாதான் எங்களோடு இல்லை. இனி அந்த அடுக்கு மல்லிகையின் தனித்த வாசனையில் என்றென்றைக்குமாய் அவர் நிறைந்திருப்பார்.

அமைதியான, எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற, பூரண வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கும் அவருக்குச் செவ்வணக்கம்.

Please follow and like us:

  • 0
  • Share

Leave a Reply

Close Menu